Tuesday, November 27, 2018

வேலையும் கிறிஸ்தவ சாட்சியும்



உயிர்த்தெழுந்த இயேசு பரமேறிச் செல்லும் முன்னர் ”… எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்” என தன்னைச் சுற்றியிருந்த சீஷர்கள் கூட்டத்தில் தனது இறுதி வார்த்தைகளை சொல்லிச் சென்றார் (அப். 1:8). ஒரு கிறிஸ்தவன் தன் வாழ்க்கையில் கிறிஸ்துவுக்கு சாட்சியாக இருக்க வேண்டிய அநேக இடங்களில், வேலை செய்யும் இடம் முக்கியமான ஒன்று. ஏனெனில் சராசரியாக நாம் ஒரு நாளில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பகுதியை நம் வேலையில் தான் கழிக்கிறோம். மேலும் நமது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு நமது வேலை இடத்தில் தான் கிறிஸ்துவை அறியாத அநேகரை நாம் அதிக நேரம் சந்திக்க நேரிடுகிறது. தேறினவன்  எவனும் தன் குருவைப் போல் இருப்பான் என்ற வசனத்திற்கு ஏற்ப, நமது வேலை செய்யும் சூழ்நிலைகளில் கிறிஸ்து எப்படி நடந்து கொள்வாரோ அந்த விதமாகவே ’கிறிஸ்து அவன்’ என்று சொல்லப்படும் அந்த கிறிஸ்தவன் நடந்து கொள்வதே வேலை இடத்தில் ஒரு கிறிஸ்தவ சாட்சி என்பதாகும்.

வேலை இடத்தில் நாம் சாட்சியாக இருக்க முயலும் வேளையில், வேலையை குறித்த நமது கண்ணோட்டம் சரியாக இருக்க வேண்டும். முதலாவதாக, உலகத்தில் பலர் நினைப்பது போன்று வேலை என்பது ஒரு சாபமோ அல்லது அதன் விளைவோ அல்ல. தேவன் முதல் மனிதனைப் படைத்தபோது அவனுக்குத் தேவையான அனைத்தையும் நேர்த்தியாய் படைத்த (creation) பின்னர் மேற்கொண்டு அவனுக்கு அந்த படைக்கும் வேலையைக் (creative work) கொடுத்தார். அதாவது, முதல் மனிதன் தன் பாவத்தினால் சாபத்தை வாங்கிக் கட்டிக் கொள்ளும் முன்னரே, அவனுக்கு நிலத்தைப் பண்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் வேலையை தேவன் கொடுத்திருந்தார் (ஆதி. 2:15).

இரண்டாவதாக, உலகம் வேலையை ஒரு வருமானம் ஈட்டும் வழிமுறையாக மட்டுமே பார்க்கிறது. கிறிஸ்தவப் பார்வையின்படி, தேவன் தன் வார்த்தையால் உலகத்தையே படைத்திருப்பினும் நமது வேலை மூலமாகத் தான் உலகத்தின் அதன் ஜீவராசிகளின் அனைத்து தேவைகளையும் சந்தித்து வருகிறார். அதாவது, மனிதர்கள் மூலமாகவே தேவன் செயல்படுகிறார். மூன்றாவதாக, உலகப் பார்வையில் வேலை என்பது ஒருவரின் வாழ்க்கைக்குத் தேவையான வருமானத்தை தருவதுடன் அவருக்கு சமுதாயத்தில் ஒரு அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் அளிக்கிறது. கிறிஸ்தவப் பார்வையில், நமது வேலைகளின் மூலம் தேவன் தனது செயலை ஆற்றுவதுடன், அந்த வேலைகளின் மூலமாக நம் இருதயங்களை பக்குவப்படுத்தி நம்மை அவரது சீடர்களாக உருவாக்குகிறார்.

உலகப் பார்வையில் இருந்து வேறுபடும் இந்த மூன்று உண்மைகளையும் நாம் புரிந்து கொண்டு செயல்படும்போது வேலையிடத்தில் ஒரு கிறிஸ்தவ சாட்சியாக இருப்பது என்பது அவசியமானதாகவும் எளிதாகவும் நமக்கு அமைந்து விடுகிறது. கிறிஸ்தவர்களாக நாம் கீழ்க்கண்ட காரியங்களில் அவருக்கு சாட்சியாக இருக்க முடியும்.  
1) நேர்த்தி (Perfection):

பிடித்த வேலை என்றால் மட்டும் உற்சாகமாய் செய்வது உலகத்தார் வழக்கமாக இருக்கலாம். ஆனால் பெரியதோ சிறியதோ, உயர்ந்ததோ தாழ்ந்ததோ, வருமானம் குறைந்ததோ அதிகமானதோ, வேலை நிரந்தரமானதோ தற்காலிகமானதோ எப்படி இருந்தாலும் அது தேவன் எனக்குத் தந்த வேலை என்ற உணர்வுடன் அந்த வேலையைச் செய்யும்போதோ, அதில் உண்மையாகவும் உத்தமமாகவும் இருக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். இல்லாவிட்டால் அது சுயபரிதாபம், பொறாமை, புறங்கூறுதல் மற்றும் வேலை இடத்து அரசியல் போன்ற காரியங்களுக்குள் நம்மை வழிநடத்தி விடும். ’செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்’ (பிரசங்கி 9:10); ’சகல பிரயாசத்தினாலும் பிரயோஜனமுண்டு’ (நீதி 14:23); ’தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்’ (நீதி 22:29) என்பவையெல்லாம் சாலமோனின் அனுபவம் மற்றும் அறிவுரை. எனவே கிறிஸ்தவர்களாக நாம் வேலை இடத்தில் நேர்த்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 

நேரம் தவறாமை (Punctuality)

நமது வேலைகளுக்கு நாம் குறித்த நேரத்தில் முடிந்தால் அதற்கு சற்று முன்னரே வந்து சேர்வது நம்மை குறித்து வேலை இடத்தில் நமக்கு நற்பெயரை கொண்டு வருவதுடன் நாமும் பதட்டமின்றி பொறுமையுடன் பொறுப்பாக வேலையைச் செய்து முடிக்க அது உதவுகிறது. வேலை நேரத்தில், வேலையைக் காட்டிலும் வேறு தனிப்பட்ட காரியங்களுக்கு (ஊழிய காரியமாகவே இருப்பினும்) முக்கியத்துவம் கொடுத்து, உரிய அனுமதி எதுவுமின்றி குறித்த நேரத்திற்கு முன்னரே வேலையிடத்தை காலி செய்வதும் கூடாது. நேரம் தவறாமை என்பது வேலையில் நமது சுறுசுறுப்பு, ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு இவைகளின் ஒரு  அடையாளம் ஆகும். எனவே, நாட்கள் பொல்லாதவைகளானதால், புறம்பே இருக்கிறவங்களுக்கு முன்பாக நாம் ஞானமாய் நடந்து காலத்தைப் ’பிரயோஜனப்படுத்திக்’ கொள்ள வேண்டும் (எபே 5:16; கொலோ 4:5) கிறிஸ்தவர்கள் என சொல்லிக்கொள்கிறவர்கள் எவரும் தங்கள் வேலை நேரத்தில், யாதொரு வேலையும் செய்யாமல், வீண் அலுவற்காரராய், ஒழுங்கற்றுத் திரிகிறவர்களாக இருக்கக் கூடாது (2 தெச 3:11).

3) நேர்மை (Integrity):

நாம் மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு வேலை செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாய் தேவனுடைய சித்தத்தின்படி செய்ய வேண்டும்; அப்படி கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவோம் (கொலோ 3:24; எபே 6:6). கொஞ்சத்திலே உண்மையாயிருக்கிற உத்தமமும் உண்மையுமான ஊழியக்காரனையே அவனுடைய எஜமான் அநேகத்தின் மேல் அதிகாரியாக வைப்பார் (மத். 25:21). எனவே வேலையிடத்தில் இருக்கும் பொருட்கள் மற்றும் வசதிகளை நமது சொந்தத் தேவைகளுக்காக இலவசமாக பயன்படுத்திக்கொள்ள நினைக்கக் கூடாது. மருத்துவச் சான்று கொடுத்து சொந்த விடுப்பில் செல்வது, பயன்படுத்தப்படாத வசதிகளுக்கு உரிமை கோருதல், அலுவலக நேரத்தில் சொந்த வேலையைச் செய்தல், மனிதர்களின் தயவு கிடைப்பதற்காக லஞ்சம் அல்லது செல்வாக்கை பயன்படுத்துதல், வேலை இடத்து நெறிமுறைகளை மனப்பூர்வமாக மீறுதல் போன்றவை நம்மிடம் இருக்கவே கூடாது. மேலதிகாரிகளை மதித்தல், சக மற்றும் கீழுள்ள வேலையாட்களிடம் நல்லுறவைப் பேணுதல், குறிப்பாக எதிர்பாலருடம் முறையான உறவைப் பேணுதல் ஆகியவை நாம் கவனமாக இருக்க வேண்டிய இன்னும் பிற காரியங்களாகும்.

மேற்கண்ட காரியங்களில் கவனமாக இருந்து மற்றவர்களிடமிருந்து நாம் வித்தியாசமாக இருக்கும் போது கண்டிப்பாக சிலர் நம்மிடம் வந்து, ’நீ ஏன் இப்படி? உன்னால் மட்டும் எப்படி முடிகிறது?’ என்று வினவுவர். அப்போது ’அதெல்லாம் ஒன்றுமில்லை; அது எனது பழக்கதோஷம்; எனது சிறுவயது நற்பண்பு’ என்று சாதாரணமாகச் சொல்லி, வந்த வாய்ப்பை நழுவ விட்டுவிட வேண்டாம். ’என்னில் இருக்கும் இயேசுவால் தான் இப்படி’ என்று நாம் தைரியமாகச் சொல்ல வேண்டும். ’உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்’ (1 பேதுரு 3:15) என்ற வசனத்தின்படி வேலை இடத்தில் சாட்சியாக இருக்க மட்டுமல்லாமல் சாட்சி கொடுக்கவும் நாம் ஆயத்தமாக இருக்கவேண்டும். அப்படி கொடுக்கும் சாட்சி மட்டுமே மதமாற்றம் என்னும் குற்றச்சாட்டுக்கும்  அப்பாற்பட்டு நின்று நிறைவான பலனைத் தரும். இவற்றை மனதில் நிறுத்தி வேலை இடத்தில் நாம் சாட்சியாக இருப்போம்; சாட்சி பகருவோம்.

”புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள்” (I பேதுரு 2:12).







Tuesday, November 28, 2017

Are you really willing and ready to meet Jesus?

In a recent Interview @ Thanthi TV, the popular musician A R Rahman when asked whom he wanted to meet in this world, he replied saying, "There is a prediction that Jesus Christ would come again to this world, may be I would love to meet Him". Both the Christianity and Islam talk about the second coming of Jesus Christ. As a Muslim he would have liked to meet Jesus, but we are not sure about what he meant by it.

There were few occasions in the life of Jesus Christ that few people wanted to see / meet him. Their intention and outcome of their meeting give an idea about what really meant to see Jesus.

In Luke 19:1-10 we see that Zacchaeus, a chief tax collector wanted to see who Jesus was. But as he was short he could not see Jesus over the crowd, he tried his own way of seeing Jesus. He ran ahead and climbed a sycamore-fig tree to see him, since Jesus was coming that way. When Jesus reached the spot, he looked up and said to him, “Zacchaeus, come down immediately. I must stay at your house today.” He came down at once and welcomed him gladly. Then what happened in the life of Zacchaeus and his family is the total transformation.

From John 1:45-51, we see that Philip from the town of Bethsaida, a new follower of Jesus whom he personally called to do so, talked about Jesus to Nathanael. Inspired by the discussion, Nathanael asked Philip, “Nazareth! Can anything good come from there?” Philip replied, “Come and see". When Jesus saw Nathanael approaching, he said of him, “Here truly is an Israelite in whom there is no deceit.” “How do you know me?” Nathanael asked. Jesus answered, “I saw you while you were still under the fig tree before Philip called you.” Then Nathanael declared, “Rabbi, you are the Son of God; you are the king of Israel.” Just by meeting Jesus for the first time, Nathanael found that Jesus was the Son of God.

In John 12:21-12, it was mentioned that some Greeks among those who went up to worship at the festival in Jerusalem wanted to meet Jesus. When Andrew and Philip told about this to Jesus, he replied, “The hour has come for the Son of Man to be glorified." And he kept on saying about the cost of discipleship, along with the prediction about his own death.

According to Luke 23:1-12 during the trial before the crucifixion of Jesus Christ, Pilate sent Jesus to Herod, as he learned that Jesus was under Herod’s jurisdiction. When Herod saw Jesus, he was greatly pleased, because for a long time he had been wanting to see him. From what he had heard about him, he hoped to see him perform a sign of some sort. He plied him with many questions, but Jesus gave him no answer. So Herod became unhappy and got irritated. When the chief priests and the teachers of the law were standing there, vehemently accusing him, Herod and his soldiers ridiculed and mocked him. Dressing him in an elegant robe, they sent him back to Pilate. That day Herod and Pilate became friends—before this they had been enemies. Herod couldn't be benefited by meeting Jesus as his intentions were wrong.

Most of the people in the world would like to see Jesus for one or other reasons. Some may not like to meet him due to some reasons. Those who met Jesus with good intentions found that he was Son of God. But when Jesus comes back, "Every eye will see him, even those who pierced him; and all peoples on earth will mourn because of him" (Rev. 1:7). No one can escape of seeing Him. Why this mourning when he comes back? He is neither going to come as He came first nor as He is at present. He will come to JUDGE us for whatever we do at present.

Are you really willing and ready to meet Him?

.

Saturday, October 28, 2017

கனியற்ற கிறிஸ்தவ வாழ்க்கை

கிறிஸ்துவில் பிரியமான சகோதர சகோதரிகளுக்கு இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள். கடந்த பத்து மாதங்களாக கனியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை என ஆரம்பித்து, பின்னர் அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் என மாதமொரு ஆவியின் கனியாக இவற்றை தொடர்ச்சியாக தியானித்து வந்திருக்கிறோம். இவற்றின் மூலம் நமது கிறிஸ்தவ வாழ்க்கையில் அடிப்படையாக வெளிப்பட வேண்டிய பண்புகளை நன்கு அறிந்து கொண்டோம்.

இருப்பினும் நாளுக்கு நாள் புதிதாக வேண்டிய நமது ஆவிக்குரிய வாழ்க்கையில், ஒருவித சோர்வையும் முன்னேற்றமில்லாத நிலைமையும் நாம் அவ்வப்போது அனுபவிக்க நேரிடுகிறது. கனியற்ற கிறிஸ்தவ வாழ்க்கையின் காரணங்கள், அதன் ஆபத்துக்கள், அதன் நிவாரணங்கள் குறித்து இப்போது பார்ப்போம். இதுகுறித்து சிந்தித்துக் கொண்டிருந்த போது, “God loves everyone, but probably prefers "fruits of the spirit" over "religious nuts." என்ற ஒருவரிச் செய்தி என் கண்ணில் பட்டது. ”தேவன் அனைவரையும் நேசிக்கிறார்; இருப்பினும் புத்திபேதலித்த சமயப் பற்றாளர்களைக் காட்டிலும் ஆவிக்குரிய கனிகளைக் கொடுப்பவர்களுக்குத் தான் அவர் முக்கியத்துவம் கொடுக்கிறார்” என்பதே அந்த ஒருவரிச் செய்தி.

நாம் இரட்சிக்கப்பட்டு தேவனுடைய பிள்ளைகளாய் கிறிஸ்தவ வாழ்க்கையில் வளர்ந்து வரும்போது காலங்கள் செல்லச்செல்ல, நாம் கனிதரும் நிலையில் முன்னேறியிருக்கிறோமா என்று நம்மைநாமே சீர்தூக்கிப் பார்க்க வேண்டியது அவசியம்.  மரம் செடி கொடிகள் என்றால் அவை ஒருகட்டத்தில் அவற்றின் கனியை (பலனை) கொடுக்கும். நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் (மத்தேயு 3:10). நமது கிறிஸ்தவ வாழ்க்கையும் அப்படித்தான். கனி இல்லையேல் கதி இல்லை. திராட்சைத் தோட்டக்காரரான பரமபிதா திராசைச்செடியாகிய இயேசுகிறிஸ்துவில் கனிகொடாதிருக்கிற கொடி (நாம் தான்) எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார் (யோவான் 15:1,2). 

நம்மிடம் ஆவியின் கனி வெளிப்படுகிறதா இல்லையா என்பதை வெளியரங்கமான மாம்சத்தின் கிரியைகள் நம்மிடத்தில் காணப்படுகின்றனவா இல்லையா என்பதிலிருந்து அறிந்து கொள்ளலாம். அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே (கலா. 5:19-21). கிறிஸ்துவை அறிந்தவர்கள் என சொல்லிக்கொள்ளும் நம்மிடத்தில் ஒருவேளை இவைகள் காணப்படுமெனில், நாம் தான் அந்த புத்திபேதலித்த சமயப் பற்றாளர்கள் (religious nuts). இந்த அவலநிலை நமக்கு வேண்டாமெனில், கனிதரும் நிலையில் நாம் முன்னேற வேண்டும்.

மரம் செடி கொடிகள் கனி கொடுக்க, அவற்றிற்கென நேரம் காலங்கள் உண்டு. ஆனால், கிறிஸ்தவ வாழ்க்கையில் அவ்விதம் நேரம் காலங்களெல்லாம் கிடையாது; அனுதினமும் கனி கொடுக்க வேண்டும். இயேசு ஒருமுறை தனது பன்னிரு சீடர்களுடன் பெத்தானியாவுக்கு பயணமான போது, அவருக்குப் பசி உண்டாயிற்று. அப்பொழுது வழியருகே இலைகளுள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலே கண்டு, அதில் ஏதாகிலும் அகப்படுமோ என்று பார்க்கவந்தார். அத்திப்பழக்காலமாயிராதபடியால், அவர் அதினிடத்தில் வந்தபோது அதிலே இலைகளையன்றி வேறொன்றையும் காணாமல்: இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போயிற்று. சீஷர்கள் அதைக்கண்டு: இந்த அத்திமரம் எத்தனை சீக்கிரமாய்ப் பட்டுப் போயிற்று என்று சொல்லி ஆச்சரியப்பட்டார்கள் (மத். 21:17-20 & மாற்கு 11:11-14). இயேசு நம்மில் கனியைத் தேடும் போது அது இல்லையெனில் நம்மால் எந்த சாக்குப் போக்கும் சொல்ல இயலாது. நிச்சயம் நாம் நித்திய நரகமான அவரது சாபத்திற்கு உள்ளாக நேரிடும்.

இனிப்பு (Sweet), புளிப்பு (Sour), காரம் (Pungent), உவர்ப்பு (Salt), துவர்ப்பு (Astringent) மற்றும் கசப்பு (Bitter) என சுவைகள் ஆறு வகைகள் இருப்பினும் நாம் உண்ணும் அனைத்து உணவிலும், இவை ஆறும் ஒருங்கே இருப்பதில்லை. ஒன்றோ அல்லது ஒன்றிற்கும் மேற்பட்ட சுவையோ இருக்கலாம். ஒன்றிற்கும் மேற்பட்ட சுவைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விகிதாச்சாரத்தில் கலந்திருக்கும் போது அந்த உணவின் சுவையும் தரமும் மாறுவதைக் காண்கிறோம். அதுபோலவே கனிகொடுக்கும் கிறிஸ்தவ வாழ்க்கையும். ஆவியின் கனியாகிய ஒன்பது அம்சங்களும் சூழ்நிலைகளுக்கேற்ப தேவைகளுக்கேற்ற விதவிதமான விகிதாச்சாரங்களில் ஒருங்கே வெளிப்படும் போது அது தேவனுக்கு மகிமை கொண்டுவரக்கூடிய கனிதரும் வாழ்க்கையாக அமைகிறது.

இதனை வலியுறுத்தும் விதமாக அப்போஸ்தலனாகிய பேதுரு இவ்விதம் குறிப்பிடுகிறார். ’இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும், ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும், தேவபக்தியோடே சகோதர சிநேகத்தையும், சகோதர சிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள். இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்க வொட்டாது’ (2 பேதுரு 1:5-7). கனிதரும் கிறிஸ்தவ வாழ்க்கையில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆவியின் கனி அம்சங்களில் ஒவ்வொன்றாக நாம் பெருகும் போது எந்த அளவில் நாம் அவற்றில் பெருகுகிறோமோ அந்த அளவுக்கு அது பூரண சுவையுள்ள கனி தரும் வாழ்க்கையாக அமையும்.

கனிதரும் கிறிஸ்தவ வாழ்க்கையில் வளர்ச்சி இல்லையெனில் அது வீழ்ச்சியே. ஏதோ ஒரு முறை ஏதோ ஒரு வகை கனியைக் கொடுத்தை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு திருப்தியடைந்து விடமுடியாது. தொடர்ச்சியாக இன்னும் பல அம்சங்களில் கனிதரும் நினையில் முன்னேற வேண்டும். இல்லையெனில் நாம் இரட்சிக்கப்பட்டு பாவங்கள் மன்னிக்கப் பட்டதையும் அதன் நோக்கத்தையும் மறந்து ஒரு சாராசரி பெயர்க் கிறிஸ்தவராகவே வாழ்ந்து விடுவோம்.  இதைத் தான், 2 பேதுரு 1:9 ல் இவ்விதம் காண்கிறோம், ’இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்செய்த பாவங்களறத் தான் சுத்திகரிக்கப்பட்டதை மறந்து கண்சொருகிப்போன குருடனாயிருக்கிறான்’.

இந்த நிலைமை மாற நாம் செய்ய வேண்டியதென்ன? தாவீது சொன்னார்: ’கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்’ (சங். 1:2-3).  இயேசு சொன்னார்: ’என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்’ (யோவான் 15:4). பவுல் சொன்னார்: ’நம்முடையவர்களும் கனியற்றவர்களாயிராதபடி குறைவுகளை நீக்குகிறதற்கேதுவாக நற்கிரியைகளைச் செய்யப் பழகட்டும்’ (தீத்து 3:14). ’ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும்’ (எபே. 5:9).

இவ்விதம் நாம் தேவனுடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இயேசுவில் நிலைத்திருந்து நம் கனிதரும் வாழ்க்கை நமது சகல நற்குணத்திலும் சகல நற்கிரியைகளிலும் வெளிப்பட தேவன் நமக்கு உதவி செய்வாராக. ஆமென்.


[இது பாலைவனச் சத்தம் – அக்டோபர் 2017 இதழில் வெளியான எனது கட்டுரை]
.

Monday, September 25, 2017

ஆவியின் கனி - இச்சையடக்கம்

கிறிஸ்துவில் பிரியமான சகோதர சகோதரிகளுக்கு நமது இரட்சகர் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.  ஆவியின் கனி வரிசையில், கடைசி அம்சமான இச்சையடக்கத்தைக் குறித்து இந்தமாதம் தியானிப்போம். ஆவியின் கனி வரிசையில் இச்சையடக்கம் என்பது கடைசியாய் பட்டியலிடப்பட்டுள்ள காரணத்தினால், ஆவிக்குரிய வாழ்க்கையில் அதன் முக்கியத்துவத்தை ஒருபோதும் நாம் கடைநிலைக்குத் தள்ளிவிடக்கூடாது. ஏனெனில், ஆவியின் கனி என ஒரு பட்டியல் (கலா. 5:22,23) கொடுக்கப்பட முக்கியப் பின்னணியே இந்த இச்சையடக்கம் என்ற காரியம் தான் என்பதை அதன் முன்னும் பின்னும் உள்ள 14ம் மற்றும் 25ம் வசனங்களிலிருந்து தெளிவாக அறிகிறோம்.

இச்சையடக்கம் என்பது ஒருவர் தனது ஆசைகளை (தன்னை) அடக்கி கட்டுக்குள் வைத்திருப்பதாகும். ஆங்கிலத்தில் அது Self-control அல்லது Temperance என்ற வார்த்தைகளில் குறிப்பிடப்படுகிறது. இதன் கிரேக்க வார்த்தையான ‘egkrateia’ என்ற வார்த்தைக்கு ‘உள்ளான பெலன்’ என்று அர்த்தம். இச்சையடக்கமாகிய ஆவியின் கனி என்பது நமது சொந்த பக்தியினால் சக்தியினால் நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொள்வது (சுயக்கட்டுப்பாடு) அல்ல; மாறாக, பரிசுத்த ஆவியானவர் நமது வாழ்க்கையில் செயல்படுவதினால் நம் வாழ்க்கையில் வெளிப்படும் வெளிப்படையான அம்சமாகும். சுயத்தை சுயம் கட்டுப்படுத்துவது என்பது கூடாத காரியம்.  ’தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்’ (பிலி. 2:13). அவற்றை நிறைவேற்ற உதவியும் செய்கிறார்.

இச்சைகள் பலவிதம்: பரிசுத்த வேதாகமத்தில் ’இச்சை’ என்பது பலவிதமான அடைமொழிகளுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் சில: பாவ இச்சைகள் (ரோமர் 7:5); துர் இச்சைகள் (ரோமர் 13:14); மோக இச்சை (I தெச. 4:4); மோசம்போக்கும் இச்சைகள் (எபே. 4:22); பாலியத்துக்குரிய இச்சைகள் (2 தீமோ. 2:22); பிசாசானவனுடைய இச்சை (2 தீமோ. 2:26); மாம்ச இச்சைகள் (பேதுரு 2:11); அசுத்த இச்சை (2 பேதுரு 2:10); மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை (1 யோவான் 2:16), உலகத்தின் இச்சை (1 யோவான் 2:17) துன்மார்க்கமான இச்சைகள் (யூதா 1:18) என்பன. இதுபோன்ற இச்சைகள் ஒருவனை அடக்கி ஆளாத வண்ணம் அவன அவைகளை மேற்கொள்ளும் நிலைமையை இச்சையடக்கம் எனலாம்.

எவற்றையெல்லாம் இச்சிக்கக்கூடாது?: பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுக்கப்பட்ட பத்துக் கட்டளைகளில் ‘இச்சியாதிருப்பாயாக’ என்பது இறுதியாக பத்தாவது கட்டளையாக கொடுக்கப்பட்டுள்ளது. நாம் எதையெல்லாம் இச்சிக்கக் கூடாது? ’பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக’ (யாத். 20:17). ’உன் இருதயத்திலே அவள் [துன்மார்க்க, பரஸ்திரீ] அழகை இச்சியாதே’ (நீதி. 6:25). ’அவனுடைய [அதிபதி] ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே’ (நீதி. 23:3). ’அந்தப்படியே, உதவிக்காரர்… இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவர்களாயும் இராமல்…’ (1 தீமோத்தேயு 3:8)  ’கண்காணியானவன் தேவனுடைய உக்கிராணக்காரனுக்கேற்ற விதமாய், … இழிவான ஆதாயத்தை இச்சியாதவனும்’ (தீத்து 1:7).  இவ்விதம் பலவிதமான காரியங்களை இச்சிக்கக் கூடாது என நாம் வேதாகமத்திலிருந்து வெளிப்படையாக அறிகிறோம்.

இச்சையின் விளைவுகள்:  ஒருவனுக்கு பாவ சோதனைகளை கொண்டுவருவதே அவனுடைய உள்ளான இச்சை தான். ’அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்’ (யாக். 1:14 ). ’உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது; உங்கள் அவயவங்களில் போர் செய்கிற இச்சைகளினாலல்லவா?’ (யாக். 4:1). இச்சையின் இறுதிபலன் மரணம். ‘பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்’ (யாக். 1:15). இச்சைகளை நிறைவேற்றும் உள்ளான எண்ணத்துடன்,, வெளிப்படையாக பக்தியாக நாம் ஜெபித்தாலும் அந்த ஜெபம் வீணாய்ப் போய்விடுகிறது. ‘நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்’ (யாக். 4:3).

இச்சையடக்கத்தின் பலன்கள்: நித்தியவாழ்வில் நித்திய கிரீடத்தைப் பெற்றுக்கொள்ள இச்சையடக்கம் அவசியமான ஒன்றாக இருக்கிறது. ‘பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள்; நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்’ (கலா. 5:16). இச்சையடக்கத்துடன் நடந்துகொள்வது ஒரு உண்மைக் கிறிஸ்தவனுடைய அடையாளம். ’கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்’ (கலா. 5:24). அநித்தியாமான, அற்பநேர இன்பம்தரும் இச்சைகளுக்கு இணங்காமல் நித்தியமான பலனை எதிர்நோக்கிக் காத்திருக்கும் போது,   இச்சையடக்கம் நமக்கு பொறுமையைக் கொண்டுவருகிறது (2 பேதுரு 1:6). இச்சையடக்கம் என்பது ஒருவரின் ஆசைஇச்சைகளை அடக்கி வைத்திருப்பதால், அது அவனை அடிமைப்படுத்துவதாக அர்த்தமல்ல; அதுதான் அவனுக்கு உண்மையான விடுதலையைக் கொண்டுவருகிறது. அவனுடைய குற்ற உணர்வுகளிலிருந்து அவனை விடுவிக்கிறது.

இச்சையை மேற்கொள்வது எப்படி?: இச்சைகளின் ஆரம்பமே அது சம்பந்தமான எண்ணங்களும் சூழ்நிலைகளும் தான். எனவே அவற்றில் நாம் கவனமுள்ளவர்களாக இருக்கவேண்டும். ’எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது. அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்’. (2 கொரி. 10:4,5). நம் எண்ணங்களை கிறிஸ்துவுக்கு நேராக ஒருமுகப்படுத்தும் போது இச்சைகளிலிருந்து விடுபடமுடியும். பரிசுத்த ஆவியானவரின் ஆளுகைக்கும் அனுதின வழிநடத்துதலுக்கும் நம்மை நாம் விட்டுக்கொடுக்க வேண்டும். ’ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்’ (கலா. 5:16). ’நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம்’ (கலா. 5:25). 

இச்சையடக்கத்தில் அடுத்து முக்கியமாக கவனமாக இருக்க வேண்டியது பாவ சூழ்நிலைகளிலிருந்து விலகிச் செல்வதாகும். விலகியிருக்க வேண்டிய பாவங்கள் என பல பரிசுத்த வேதாகமத்தில் கூற்ப்பட்டிருந்தாலும் விலகி ஓட வேண்டிய பாவங்கள் என குறிப்பிடப்பட்டுள்ள மூன்றில் இச்சையும் ஒன்று. ’அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு’ (2 தீமோ. 2:22). எனவே இச்சையடக்கமில்லாத அஞ்ஞானிகளுடன் உள்ள சகவாசத்தைக் குறைத்து, கிறிஸ்துவினுடையவர்களிடம் அதிகம் ஐக்கியம் கொள்ளுவதினாலும் இவற்றின் மூலம் அனுதின வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவரின் ஆளுகைக்குள் நம்மை அர்ப்பணிக்கும் போது ஆவியின் கனியாகிய இச்சையடக்கம் நம் வாழ்வில் வெளிப்படும். இந்த விதமான அனுபவங்களுக்கு நம்மை அர்ப்பணிப்போமாக. 

ஆமென். 


[இது பாலைவனச் சத்தம் – செப்டெம்பர் 2017 இதழில் வெளியான எனது கட்டுரை]

Monday, August 14, 2017

ஆவியின் கனி – சாந்தம்

நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ள கர்த்தரின் நாமத்தில் நான் உங்களை வாழ்த்துகிறேன். ஆவியின் கனி வரிசையில் அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம் இவைகளைத் தொடர்ந்து எட்டாவது அம்சமாக காணப்படும் சாந்தம் குறித்து நாம் இந்த மாதத்தில் தியானிப்போம்.
சாந்தம் என்பதற்கு கிரேக்க மொழியில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘Prautes’ என்ற வார்த்தையானது, ஆங்கிலத்தில் gentleness (மென்மை) மற்றும் meekness (அடக்கம்) என்ற வார்த்தைகளில் குறிப்பிடப்படுகிறது. பொதுவாக gentleness என்பது ஒருவரது வெளிப்படையாக செயல்பாடுகளையும் meekness என்பது ஒருவரது உள்ளான மனநிலையையும் குறிப்பவை. எனவே உள்ளான அடக்க குணம் ஒருவரது மென்மையான செயல்களில் வெளிப்படுவதை சாந்தம் என வரையறுக்கலாம்.  சாந்தம் என்பது ஒருவருடைய இருதயத்தில் மறைந்திருக்கும் குணம் (I பேதுரு 3:4).  ஆனால் அது நமது கிரியைகளில் வெளிப்படும். ’உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக’ என பவுல் கூறுவதை பிலிப்பியர் 4:5 ல்  நாம் வாசிக்கிறோம்.
சாந்தகுணம் என்பது ஒருவர் தன் இயலாமையினால் விதியின் மீது பழியைப் போட்டு வேறுவழியின்றி அமைதியாய் இருக்கும் நிலை அல்ல; மாறாக, சாதகம் மற்றும் பாதகமான எல்லா சூழ்நிலைகளிலும் தேவன் மீது நம்பிக்கை வைத்து அவரது சித்தத்திற்கு தன்னை அர்ப்பணித்து தனது சுய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு அடுத்தவர் மீது மென்மையுடன் நடந்து கொள்ளும் உள்ளான குணம். இந்த உண்மையினை புரிந்து கொள்ள சங்கீதம் 37 யை நாம் வாசித்து அறிந்து கொள்ளவேண்டும். குறிப்பாக 11ம் வசனத்தில், ’சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்’ என்று வாசிக்கிறோம்.  இதையே தான் இயேசு கிறிஸ்துவும் தனது மலைப்பிரசங்கத்தில், ’சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள்’ (மத்தேயு 5:5) என கூறினார். 
பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளில் சாந்தகுணமுடன் நடந்து கொண்டவர்களை பெரியதாக பட்டியலிட முடியும். அந்தப் பட்டியலில் மோசே (எண்ணாகமம் 12:3), தாவீது (2 சாமுவேல் 16:11-12), யோபு (யோபு 1:21), எரேமியா (எரேமியா 11:19), இயேசு கிறிஸ்து (மத். 11:29) மற்றும் பவுல் (2 கொரி. 10:1) ஆகியோர் முக்கிய இடம் பெறுகின்றனர். இவர்கள் அனைவருமே தங்கள் சாந்தகுணத்தினால் பாதகமான சூழ்நிலைகளிலும் மனரம்மியத்துடன் நடந்துகொண்டனர்.
’நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்’ என்றார் இயேசுகிறிஸ்து (மத்தேயு 11:29). சாந்தமும் மனத்தாழ்மையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்தக்கூடிய நிலையில் உள்ள ஒருவர் மற்றவரை தன் அதிகாரத்தினால் தாழ்மைப்படுத்த (humiliate) தான் முடியும். ஆனால், தான் மனத்தாழ்மை (humility) உடைய ஒருவரோ அந்த அதிகாரத்தை அடக்கத்துடன் முறையாக பயன்படுத்தி அடுத்தவரை தன் வயப்படுத்த முடியும். இது சாதாரணமாக மனிதனால் கூடாதது தான். இது ஆவியின் கனி. ஒருவரது அதிகார தோரணைக்குப் பயந்து ஒருவர் கீழ்ப்படிவதைக்காட்டிலும் அவரது சாந்தகுணத்திற்கு முன்பாகவே அநேகர் கீழ்ப்படிவர் (I பேதுரு 2:18).  மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான் (எண்ணாகமம் 12:3 ). எனவே தான் இஸ்ரவேல் ஜனங்களை மோசேயால் வெற்றிகரமாக வழிநடத்த முடிந்தது.
சாந்தகுணம் என்பது பயந்தசுபாவம் (timid) உடையதல்ல; மாறாக சாந்தம் என்பது தாழ்மையான இருதயத்துடன் சமாதானமான மனநிலையில் தேவனுடைய திட்டத்திற்கு முழுவதும் அர்ப்பணிக்கப் பட்ட நிலையைக் குறிக்கிறது. சாந்தமாய் இருப்பதற்கு எதிர்மறையான காரியம் கோபப்படுதல் ஆகும். கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடிய சாந்தமுள்ளவன் சண்டையை அமர்த்துகிறான் (நீதிமொழிகள் 15:18); நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்; முற்கோபியோ புத்தியீனத்தை விளங்கப்பண்ணுகிறான் (நீதிமொழிகள் 14:29) என்ற வசனங்களின் மூலம் இதனை உணர்ந்து கொள்ளலாம்.
சாந்தகுணம் என்பது அக்கறையின்றி நமக்கேன் வம்பு என அலட்சியமாக இருந்து விடுவது அல்ல; மாறாக  இல்லாமல் அன்பிற்கும் சாந்தகுணத்திற்கும் தொடர்புண்டு. (I கொரிந்தியர் 13:4). தேவனிடமும் சக மனிதரிடமும் உண்மையாக அன்புசெலுத்தும் போது நமது  சாந்தகுணம் வெளிப்படுகிறது. ’உங்களுக்கு முன்பாக இருக்கும்போது தாழ்மையாயும், தூரத்திலே இருக்கும்போது உங்கள்மேல் கண்டிப்பாயுமிருக்கிற பவுலாகிய நான் கிறிஸ்துவின் சாந்தத்தையும் தயவையும் முன்னிட்டு உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்’ (II கொரிந்தியர் 10:1) என்பது பவுலின் அனுபவ சாட்சி.  நாமும் அவ்விதம் நடந்துகொள்ள கலாத்தியர் 6:1 ல் ‘சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்’ என அவர் அறிவுறுத்துவதைப் பார்க்கிறோம்.
சாந்தகுணம் ஒரு பலவீனம் அல்ல (Meekness is not a weakness); மாறாக ஆவிக்குரிய ஒருவருக்கு அதுவே பலம் எனலாம். சாந்தகுணமுள்ளவர்களுக்கு கிடைக்கும் பலன்களாவன: ’சாந்தகுணமுள்ளவர்கள் புசித்துத் திருப்தியடைவார்கள்’ (சங்கீதம் 22:26); ’கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்’ (சங்கீதம் 147:6); ’சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்’ (சங்கீதம் 149:4); ’சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்’ (சங்கீதம் 25:9); ‘சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள்’ (மத்தேயு 5:5).
நம்முடைய சுபாவமும் நடத்தையும் எப்படி உள்ளன? எல்லா சூழ்நிலைகளிலும் தேவனுடைய அநாதி தீர்மானம் மற்றும் ஆளுமைக்கு நம்மை முழுவதுமாக அர்ப்பணித்திருக்கிறோமா? அதிகாரம் செலுத்தும் நிலைகளில் இருக்கும் போது அதனை நாம் எந்த மனநிலையுடன் செயல்படுத்துகிறோம்? பாதகமான சூழ்நிலைகளிலும் பரலோக தேவன் மீது பற்றுதல் உள்ளவர்களாக காணப்படுகிறோமா?  நம்மை சுற்றிலும் அநியாயங்கள் அரங்கேறும் போது பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சல், கோபம், பொறாமை கொள்கிறோமா அல்லது சாந்தகுணத்துடன் மனசமாதானத்தைக் காத்துக்கொண்டு அடுத்தவர் மீது உண்மையான அன்புடன் சூழ்நிலையை பொறுமையுடன் கையாளுகிறோமா? என நம்மை நாமே ஆராந்து அறிந்து சாந்தம் என்னும் ஆவிக்குரிய கனியில் பெருக நம்மை அர்ப்பணிப்போம். ஆமென். 

[இது பாலைவனச் சத்தம் – ஆகஸ்ட் 2017 இதழில் வெளியான எனது கட்டுரை]

Friday, July 21, 2017

புறப்பட்டுப் போய் … ... ...

{கடந்த வாரம் இதே நாளில் (14.07.2017) குவைத் IEM ஜெபத்தில் நான் பகிர்ந்து கொண்ட சிந்தனை}

தேவனுடைய கிருபையினால் இந்த நாளிலும் நாம் இப்படியாக கூடி ஜெபிக்க கிடைத்த வாய்ப்பு, இதில் அவருடைய வசனத்தை உங்களுடன் பகிந்து கொள்ள தேவன் எனக்குக் கொடுத்த வாய்ப்புக்காக அவருக்கு நன்றி செலுத்துகிறேன். இது பெரிய பிரசங்கம் அல்ல. இன்று வெள்ளிக்கிழமை; சபைகளில் சென்று தேவசெய்திகளைக் கேட்டிருப்போம். இல்லையெனில் இனி கேட்க இருக்கிறோம். நானும் ஏற்கனவே இன்று கேட்டாகி விட்டது; இனியும் கேட்கவிருக்கிறேன். எனவே இது பெரிய செய்தி அல்ல. இது ஒரு சிறிய சிந்தனை தான். 

இப்போது IEM ஊழியங்களை அறிமுகப் படுத்திவிட்டு, நாம் எந்த அளவில் அதில் பங்கெடுக்கலாம் என ஒரு பெரிய பட்டியலைக் காட்டினார்கள். சிறியதாய் ஒன்றில் ஆரம்பித்து அது வரவர பெரியதாகப் போய் கடைசியாக வெடிகுண்டு போடுற மாதிரி ஒன்றைக் கூறினார்கள்.  சிறியதாக முதலில் ஜெபிக்கிற காரியம்... அது ரொம்ப சிம்பிள். அது யார் வேண்டுமானாலும் செய்யலாம். செய்யவில்லையென்றாலும் கூட செய்ததாக சொல்லிக் கொள்ளலாம். ஆனால் கடைசியாகச் சொன்னது மிஷனெரியாகப் போகிறது... அது சாதாரண காரியம் அல்ல. ஆனால், விசுவாசிகளாகிய நாம் அனைவருமே மிஷனெரிகளாக அழைக்கப்பட்டிருக்கிறோம்.

இயேசுகிறிஸ்துவின் இறுதிக்கட்டளையாக (Great Commisison) மத்தேயு 28:19 ல் ’ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார்’ என வாசிக்கிறோம். ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய் … … போகவேண்டும் என்பது சீடர்களுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளை. இயேசுவின் சீடர்கள் என சொல்லிக் கொள்ளும் நமக்கும் இது கட்டளையாக கொடுக்கப்பட்டுள்ளது. “The great commission is not an option to be considered; it is a command to be obeyed”  என்றார் Hudson Taylor என்ற மிஷனெரி.

ஆகையால், புறப்பட்டுப் போய்… நாமும் இந்தியாவிலிருந்து புறப்பட்டு இங்கே குவைத் வந்திருக்கிறாம். ஆனால், நாம் வந்த நோக்கம் வேறு என்பது நமக்கே தெரியும். அங்கே இருக்கிற பொருளாதார மற்றும் சில சூழ்நிலைகள் நமது ஒரு சில எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற வில்லை. எனவே அவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே நாம் இங்கே வந்திருக்கிறோம். நம்மில் யாருமே இந்த வசனத்தின் அடிப்படையில் தான் குவைத்திற்கு வந்திருக்கிறேன் என்று சொல்ல மாட்டோம் என நினைக்கிறேன். 

போ என்பது அந்தக் காலத்தில் கடினமான ஒன்று, ஆனால், இந்த காலத்தில் போவது எளிதான காரியமாகிவிட்டது. இன்னும் சொல்லப்போனால், இந்த காலத்தில் போகவேண்டியது கூட இல்லை. இண்டர்நெட், சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தியை பகிர்ந்து கொண்டால் உலகில் பல பாகங்களிலிருந்தும் பலர் நம்மைத் தொடர வாய்ப்பு உள்ளது. அந்த அளவுக்கு தகவல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்டன. போகவேண்டியது கூட இல்லை. இந்த நாட்களில் போக வேண்டிய சூழ்நிலையும் கூட தானாகவே வந்துவிட்டது. தொழிலுக்காகவோ ஊழியத்திற்காகவோ விரும்பியோ விரும்பாமலோ நாம் போக வேண்டிய சூழ்நிலைகளும் உருவாகி விட்டன. இன்றைய உலக வளர்ச்சியினை நகரமயமாக்கல், உலகமயமாக்கல், தொழில்மயமாதல்  இப்படி எந்த வார்த்தைகளில் நாம் வர்ணித்தாலும் அதில் நாம் உள்ளடங்கியிருப்பதால், இந்தியாவில் ஒரு கிராமத்திலோ அல்லது நகரத்திலோ இருந்த நாம் இப்படியாக நாடுகடந்து நாடு வந்து சேர்ந்திருக்கிறோம். எனவே இப்போது போவது ஒரு பெரிய காரியமே அல்ல. 

நாமெல்லாரும் குவைத் வந்தாயிற்று. ஆனாலும் வந்த இந்த இடத்தில் அடுத்து செய்ய வேண்டிய காரியத்தை நாம் செய்கிறோமா என்பது தான் முக்கியமான காரியம். அது என்ன காரியம்? சகல ஜாதிகளையும் சீஷராக்கி … …  எனவே, ’மிஷனெரிகளாய் வட இந்தியாவில் ஊழியம் செய்பவர்கள் மட்டும் தான் மிஷனெரிகள்; அது அவர்கள் மேல் விழுந்த கடமை, எனவே அவர்களைத் தாங்குவது நம்முடைய கடமை; அத்துடன் நமது கடமை முடிந்து விட்டது’ என நாம் நினைக்கக் கூடாது. நாமும் இங்கு ஒரு மிஷனெரி போன்று தான் இருக்கிறோம். இருக்கிற இடத்திலே நாம் நம்முடைய வேலைகளில் உத்தமமாக கிறிஸ்தவ சாட்கியைக் காத்துக் கொள்கிறோமா? சாட்சியுடன் நடந்து கொள்வதுடன் மட்டுமல்லாமல் சாட்சி பகருகிறோமா என்பதும் முக்கியம். இருக்கிற இந்த இடத்திலும் ஆண்டவருக்காய் யாரையாகிலும் அதாயப்படுத்த முடியுமா என்ற சிந்தனை உள்ளவர்களாக நாம் இருக்க வேண்டும். 

பரிசுத்த வேதாகமத்தில் தேவனுடைய கட்டளையை ஏற்று புறப்பட்டுப் போன ஒருவரைக் குறித்த ஒரு சிந்தனையை உங்களிடம் பகிந்து கொண்டு செய்தியை முடிக்க விரும்புகிறேன். ஆபிரகாமைக் குறித்துச் சொன்னால், அதிகம் சொல்லிக் கொண்டே இருக்கலாம். ஆனாலும் ஆதியாகமம் 12 ம் அதிகாரம் முதல் நான்கு வசனங்களை மாத்திரம் பார்க்கலாம். அந்த வசனங்களை நான் உங்களுக்காக வாசிக்கிறேன். 

1. கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. 2. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். 3. உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார். 4. கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப் போனான்; லோத்தும் அவனோடேகூடப் போனான். ஆபிராம் ஆரானைவிட்டுப் புறப்பட்டபோது, எழுபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான்.

ஆபிரகாமுக்கு அதுவரையும் குழந்தையில்லை என்பது நமக்குத் தெரியும். இப்போது வயது எழுபத்தைந்து; நூற்றி எழுபத்தைந்து வயது வரை அவன் உயிரோடு இருந்ததாக ஆதியாகமம் 25ல் நாம் பார்க்கிறோம். நூற்று எழுபத்தைந்து வருட தன் உலக வாழ்க்கையில், அவன் தனது எழுபத்தைந்தாவது வயதில் தேவனுடய அழைப்பைப் பெறிகிறான். சங்கீதம் 90:10ன் படி,  நமது ஆயுசு நாட்கள் எழுபது; பெலத்தின் மிகுதியினால் எண்பது; அதுவும் இடுப்புவலி மூட்டுவலி அது இது என கொஞ்சம் கஷ்டம் தான். நம்மில் பலரும் நமது ஆயுளில் பாதியில் அல்லது பாதியைக் கடந்து கொண்டு இருக்கிறோம். ஆபிரகாம் அழைப்பைப் பெற்றபோது தனது ஆயுள் நாளில் பாதியை இன்னும் கடக்கவில்லை. நமக்கும் இது மிகவும் தாமதமாகி விட்ட ஒன்று அல்ல. 

ஆபிரகாம் ஆண்டவரிம் இருந்து எப்படிப்பட்ட அழைப்பை பெற்றார் என்று நான் சிந்தித்த போது, அது எனக்கு மிகவும் பிரயோஜனமாகக் காணப்பட்டது. நாம் எப்போதுமே வீடுகளில் இந்த இரண்டாம் வசனத்தைத தான் சுவர்களில் மாட்டி வைத்திருப்போம், இல்லையெனில், மூன்றாம் வசனத்தைக் கூட நமக்குள் சொல்லிக் கொள்வோம். முதல் வசனம் தான் நிபந்தனை. முதல் வசனமாகிய நிபந்தனையை ஆபிரகாம் நிறைவேற்றும் போது, ஆண்டவர் அவ்வித காரியங்களை செய்வதாக வாக்குப் பண்னினார். ஆபிரகாம் அப்படியே நிறைவேற்றினார், ஆண்டவரும் அப்படியே வாய்க்கச் செய்தார் என்பதை பின்பு நாம் சரித்திரத்தில் காண்கிறோம். 

இந்த பின்னணியில், ஆபிரகாமை மூன்று விதமான காரியங்களில் இருந்து போகும்படியாக தேவன் அவனை அழைப்பதை இங்கே பார்க்கிரோம். முதல் வசனத்தில் பாருங்கள். ஒன்று, தேசத்தை விட்டுப் போக வேண்டும்; இரண்டு, இனத்தை விட்டுப் போக வேண்டும், மூன்று, தகப்பனுடைய வீட்டை விட்டுப் போக வேண்டும். அப்பொழுது இரண்டு மற்றும் மூன்றாம் வசனங்களில் சொல்லப்பட்ட ஆசீர்வாதங்கள் வந்து சேரும் என்கிறார். நான்காம் வசனத்தில் பார்க்கிறோம்… கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப் போனான். 

நாமெல்லாரும் இங்கு வந்து விட்டோம். ஆனால், இங்கு சொல்லப்படிருக்கும் கோணத்தில் தான் வந்திருக்கிறோமா என்றால் இல்லை என்பது தான் பதிலாக இருக்கும். நம் நாட்டை விட்டு நாம்  வந்திருக்கிறோம். அங்கே நிலைமை சரியில்லை. அங்கு இருக்கும் அரசியல் நிலைமைகளுக்கு இடையில் இங்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறோம். நாம் நமது இனத்தை விட்டு வந்திருக்கிறோமா? சிந்திக்க வேண்டும். இன்னும் நமது மொழியை மறக்கவில்லை. இன்னும் நமது கலாச்சாரத்தை நாம் மறக்கவில்லை. இன்னும் கொஞ்சம் உள்ளே சென்று நோக்கினால், வடக்கு தெற்கு, அது இது என பல்வேறு எண்ண ஓட்டங்கள் இங்கும் நமக்குள் ஓடிக்கொண்டிருக்கும். இங்கே இருந்து கொண்டும் நாம் இன்னும் அவைகளை விட்டுவிடவில்லை. இன்னும் குறிப்பாக, நாம் நமது தகப்பன் வீட்டை விட்டுவந்திருக்கிறோமா? நான் இங்கு வந்ததே அதற்காகத் தானே? பின்னர் எப்படி விட முடியும்? அப்படித் தானே? நமது சொந்தபந்தங்கள் அப்பா அம்மா நமது குடும்ப உறுப்பினர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தானே நாம் இங்கு வந்திருக்கிறோம். 

எனவே நாம் இங்கு வந்து சேர்ந்திருப்பது ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்ட அழைப்பு போன்றும் அவனது கீழ்ப்படிதல் போன்றும் அல்ல. ஆனால், இங்கு நாம் சிந்திக்க வேண்டியது, ஆபிரகாமை எழுபத்தைந்து வயதில் ஆண்டவர் அழைத்த அழைப்பு ஒரு சாதாரண அழைப்பு அல்ல; அவனது கீழ்ப்படிதலும் ஒரு சாதாரண கீழ்ப்படிதல் அல்ல. நாமெல்லாரும் இங்கு வந்து சேர்ந்தது கூட, ஏதோ ஒருநாளில் திடீரெனெ எடுப்பப்பட்ட தீர்மானம் அல்ல, சில மாதங்களோ வருடங்களோ அதைக்குறித்து யோசித்து தீர ஆராய்ந்து வந்து சேர்ந்திருக்கிறோம். இப்போது நாம் இங்கு இருந்தாலும் வயதான நாட்களிலாவது நாமும் நமது சந்ததியும் பொருளாதார நிலையில் வலுவாக நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்காக நாம் இங்கே இப்போது இருக்கிறோம். ஆபிரகாமோ எல்லவற்றையும் விட்டுவிட்டுப் போகும்படி அழைக்கப்பட்டான். 

எல்லாவற்றையும் விட்டுவிட்டு செல்வதென்றால், பின்னர் வாழ்க்கை என்பது தான் என்ன? என்ற சிந்தனை ஆபிரகாமுக்கு வந்திருக்கக் கூடும். அந்த சூழ்நிலையிலும் அவர் வாழ்க்கையைக் குறித்து ஒரு சரியான நிலைப்பாட்டினை எடுத்ததன் விளைவு தான் அவனது கீழ்ப்படிதல். நாம் எதற்காக இந்த உலகத்தில் வாழ்கிறோம். சிறுவயதில் கஷ்டப்பட்டு படித்தோம்; இப்போதும் கடினமாக உழைக்கிறோம்; நம் சந்ததிக்காக சேர்க்கிறோம்; ஒரு கட்டத்தில் உலகத்தை விட்டுக் கடந்தும் செல்வோம். இந்த கால ஓட்டத்தில் கடந்து செல்வது மட்டும் தான் வாழ்க்கையா? தேவன் நம் ஒவ்வொருவரையும் குறித்து நோக்கங்களும் திட்டங்களும் வைத்திருக்கிறார். அவற்றை நாம் நிறைவேற்ற வேண்டும். 

ஆபிரகாம் இவ்விதமாகத் தான் வாழ்க்கையைக் குறித்து சிந்தித்திருக்க வேண்டும். வாழ்க்கை என்பது வெறுமனே கடந்து செல்வது மட்டுமல்ல; திட்டங்களை நிறைவேற்றுவது தான் என அவர் உணர்ந்திருக்க வேண்டும். நிறைவேற்றுதல் என்னும் போது எதனை? எனது விருப்பங்களையா? பெற்றோர் அல்லது சமுதாய எதிர்பார்ப்புகளையா? இல்லை…  நம்மைக்குறித்த தேவனுடைய சித்தத்தை நம் வாழ்க்கையில் நிறைவேற்றி முடிப்பது தான் வாழ்க்கை. வாழ்க்கையைக் குறித்த இந்த கண்ணோட்டம் இருந்த காரணத்தினால், ஆபிரகாமால் முழுமையாக விட்டுப் போக முடிந்திருக்கிறது. அவரது சந்ததியும் நன்றாக ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது.

நாம் ஒருவேளை இவ்விதமாக அழைக்கப்படாவிட்டாலும் இது குறித்த சிந்தனை, வாழ்க்கையைக் குறித்த நமது சிந்தனையை மாற்றியமைக்கிறது. இன்று நமது சிந்தனை எப்படி இருக்கிறது? நாமெல்லாரும் மிஷனெரி ஊழியங்களில் ஏதோவொரு விதங்களில் ஈடுபடுகிறோம், அது நல்லது. ஜெபிக்கிறோம்… கொடுக்கிறோம்… அனுப்புகிறோம்.. ஆனால், போகவும் ஆயத்தமாக இருக்கிறோமா? ’அன்பே இல்லாமல் நம்மால் கொடுக்க முடியும்; ஆனால் கொடுக்காமல் அன்பு செலுத்த முடியாது’ என யாரோ ஒருவர் கூறியதாக ஒரு மேற்கோள் சொல்லப்படுவதைக் கேட்டிருக்கிறேன். ஆனால், மிஷனெரி ஊழியங்களில் பல நேரங்களில் ஜெபிக்காமல் நம்மால் கொடுக்க முடியும்; ஆனால் கொடுக்காமல் அல்லது ஈடுபடாமல், நம்மால் ஜெபிப்பதை மட்டுமே செய்துகொண்டிருக்க முடியாது. ஜெபம் முக்கியமான அடிப்படையான ஒன்று. ஜெபம் நம்மை ஈடுபாட்டுக்குள் வழிநடத்தும். அப்போஸ்தலர் 1:8 ல் ’பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்’ என்று பார்க்கிறோம். அதாவது முதலில் இருக்கும் இடத்தில், இருக்கும் நாட்டில், பக்கத்து இடங்களில், உலகத்தில் அனைத்து நாடுகளிலும் நாம் சாட்சிகளாக இருக்க அழைக்கப் பட்டிருக்கிறோம்.

எனவே ஊழியங்களுக்காக நாம் ஜெபிப்பது நல்லது. ஜெபிக்கும் போது நம்மால் கண்டிப்பாக கொடுக்கவும் முடியும். ஆனால், ஆபிரகாமுக்கு வந்த அழைப்பு நமக்கும் வருமென்றால் சுவிசேஷம் நிமித்தமாய் புறப்பட்டுச் செல்லவும் நாம் ஆயத்தமாக இருக்கிறோமா என்று நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம். நம் சொந்த நாட்டைவிட்டு வந்து விட்ட நாம் வந்த இடத்தில் சாட்சிகளாக வாழுகிறோமா? சாட்சி பகருகிறோமா? சிந்தித்துப் பார்ப்போம். அர்ப்பணிப்போம். தனிப்பட்ட முறையில் தேவன் நம்மோடு இடைபட்டு வழிநடத்துவார். 

ஆமென்.  

- பேதுரு தேவதாசன்